ஜோகூர், 03 நவம்பர் 2026 : ஜோகூர் மாநிலத்தின் செகாமாட் பகுதியில் அமைந்துள்ள பத்து அனாம் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் வடிவேலன் சிமாதிரி ஆகிய இருவரும், 2026ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஜோகூர் மாநிலக் கல்வித் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பாராட்டு விருது விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமாவுக்கு ‘தலைமையாசிரியர் ஆளுமை விருது’ (Anugerah Ikon Guru Besar 2026) வழங்கப்பட்டது. பள்ளியின் கல்வி வளர்ச்சி, நிர்வாகத் தலைமைத்துவம் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதே நிகழ்வில், பத்து அனாம் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் வடிவேலன் சிமாதிரிக்கு ‘ஆசிரியர் ஆளுமை விருது’ (Anugerah Ikon Guru 2026) வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ஆசிரியர் பணியில் அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கொண்டுள்ள ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், பத்து அனாம் தமிழ்ப்பள்ளியின் கல்விச் சாதனைகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சாதனைகளுக்குப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளிச் சமூகத்தினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்த வெற்றிகள் வெளிப்படுத்துகின்றன. பத்து அனாம் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி, மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் எனப் பள்ளிச் சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.







