என் தமிழ்

கம்போங் மலாயு சுபாங்கில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிப்பு : மக்கள் சேவை மையம் நடவடிக்கை – மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை!

சுங்கை பூலோ, 03 நவம்பர் 2026 : கனமழையால் சுங்கை பூலோவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கம்போங் மலாயு சுபாங் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்யத் தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதற்காக பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம், ஷா ஆலம் மாநகராட்சி, ஷா ஆலம் மாவட்ட சமூக நலத்துறை, மலேசியக் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கம்போங் மலாயு சுபாங் JPKK ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதைய தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்காக கம்போங் மலாயு சுபாங், டேவான் சியாந்தான் மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையம் (PPS) அடையாளம் காணப்பட்டுள்ளது. தேவையான காலம் வரை இந்த மையம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை பூலோவிலுள்ள பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனமாகக் கண்காணிக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், தங்களது மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் தேவையான உதவிகளின்றி விடப்படக் கூடாது என்பதற்காக மக்கள் சேவை மையம் தொடர்ந்து நிலவரத்தைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடையின்றி நடைபெறவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Scroll to Top