கோலாலம்பூர், 03 நவம்பர் 2026 : மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அதன் 35ஆம் ஆண்டு சிறப்பு விழா கம்போங் மெலாயுவில் நடைபெற்றது. இயக்குநர் சுகன் பஞ்சாட்சரத்தின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான இத்திரைப்படத்தின் சிறப்பையும், மலேசியக் கலை மற்றும் திரைப்படத் துறைக்கு அது ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியைத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர், மலேசியக் கலைத்துறைக்கும் திரைப்படத் துறைக்கும் முன்னோடியாக அமைந்த படைப்புகளில் ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படம் முக்கியமானது எனப் பாராட்டினார்.



மலேசியத் திரைப்படத் துறை இன்று பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் அங்கீகாரமும் விருதுகளும் பெறும் படைப்புகளும் உருவாகி வரும் நிலையில், அவற்றுக்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடிப் படைப்புகளில் ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படமும் ஒன்றாகத் திகழ்கிறது என டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் குறிப்பிட்டார்.
இந்தச் சாதனைக்குப் பின்னால் இயக்குநர் சுகன் பஞ்சாட்சரத்தின் அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியக் கலை மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என்றார்.


மேலும், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இயக்குநர் அல்லது நடிகர்களின் பங்களிப்புடன் மட்டும் முடிவடைவதில்லை; அதன் உருவாக்கத்தில் ஈடுபடும் ஒவ்வொரு கலைஞரும் தொழில்நுட்பக் கலைஞரும் தயாரிப்புக் குழுவினரும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், அதன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துக் கொண்டார்.
35 ஆண்டுகளைக் கடந்தும் மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நினைவுகூரப்படும் படைப்பாகத் திகழும் ‘நான் ஒரு மலேசியன்’ திரைப்படத்தின் பயணத்தையும், அதன் பின்னணியில் உழைத்த கலைஞர்களின் பங்களிப்பையும் போற்றும் நிகழ்வாக இந்த ஆண்டு விழா அமைந்தது.







