பினாங்கு, 02 நவம்பர் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் நிபோங் திபால் வட்டாரப் பேரவையும் பினாங்கு மாநிலப் பேரவையும் இணைந்து நடத்திய ‘தீபாவளி அட்சய பாத்திரம் 2026’ திட்டத்தின் கீழ், பி40 பிரிவைச் சேர்ந்த 21 குடும்பங்களுக்கு அட்சய பாத்திரத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, பினாங்கு மாநிலம் நிபோங் திபால், லாடாங் விக்டோரியாவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன், PKT, PJK, PJM, அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மலேசிய இந்து சங்கத்தின் நிபோங் திபால் வட்டாரப் பேரவைத் தலைவர் ஜெகதீசன் மற்றும் வட்டாரப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, உதவி தேவைப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைத்து, அவர்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஆலய நிர்வாகங்களின் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், சமுதாய நலனில் சேவையாற்றுவதன் முக்கியத்துவத்தையும் இத்திட்டம் எடுத்துரைக்கிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பங்களித்த நிபோங் திபால் வட்டாரப் பேரவை, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொண்டூழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளியின் ஒளி, கருணை, ஈகை மற்றும் ஒற்றுமை ஆகிய நற்பண்புகள் தொடர்ந்து மக்களை வழிநடத்தி, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சமூக சேவை, ஒற்றுமை மற்றும் மக்கள் நலன் ஆகிய உயரிய பண்புகளை முன்னிறுத்தி, உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வளர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.







