என் தமிழ்

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி விழா : கிள்ளானில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

சிலாங்கூர், 29 அக்டோபர் 2026 : சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் வரும் நவம்பர் 6ஆம் தேதி கிள்ளானில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சுமார் 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிள்ளான், டத்தாரான் கிள்ளான் @ பாடாங் செட்டி திடலில் இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழா, “ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.

சிலாங்கூர் மாநில மனிதவளத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பப்பராய்டு இதனைத் தெரிவித்தார். பல்வேறு இன மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்தியப் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், பொது விருந்து மற்றும் குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தீபாவளிப் பண அன்பளிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

குழந்தைகளும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகப் பண அன்பளிப்புகள் வழங்கப்படுவதுடன், கலை நிகழ்ச்சிகளையும் விருந்தையும் அனைவரும் கண்டு மகிழலாம் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு விழா இந்து சமூகத்தின் பண்டிகையைக் கொண்டாடுவதுடன் மட்டுமின்றி, பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், மாநிலத்தின் கலாசாரப் பன்முகத்தன்மையைப் போற்றவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி என்பது மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த கொண்டாட்டம் மட்டுமல்ல; சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், சிலாங்கூரின் வளர்ச்சியில் ஒவ்வொரு சமூகமும் ஆற்றும் பங்களிப்பைப் பாராட்டவும் உதவும் நிகழ்வாகும் என அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், நிகழ்விடத்தில் மக்கள் எளிதாகச் செல்லவும் பொதுமக்கள் முன்கூட்டியே வருமாறு பப்பராய்டு கேட்டுக்கொண்டார். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வருவோர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்தக் கொண்டாட்டம் சிலாங்கூரில் பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top