என் தமிழ்

நேபாள வெள்ளப் பேரிடர் : மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி கோரி மனிதவள அமைச்சருடன் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

கோலாலம்பூர், 27 அக்டோபர் 2026 : நேபாளம்–திபெத் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26, 2026 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி கோரி, மலேசிய இந்தியக் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அமைப்பான MASFIH பிரதிநிதிகள் நாளை (அக்டோபர் 28) மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனைச் சந்திக்கின்றனர்.

கோலாலம்பூரில் உள்ள மனிதவள மேம்பாட்டுக் கழகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய உதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமமான உதவி வழங்க வேண்டும் என MASFIH வலியுறுத்துகிறது. மேலும், குடும்பங்களுக்கு ஒருமுறை நிதியுதவி வழங்கவும், இந்த விவகாரத்தைக் கையாள ஒரு முன்னணி அமைச்சரையும் பொறுப்பு அமைச்சகத்தையும் நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக 52 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் வழியாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்திப்புக்காகவும் MASFIH காத்திருக்கிறது.

மாயமான 54 பேரில் 42 பேர் இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு விரைவான அரசாங்க உதவியும் தெளிவான பதிலும் கிடைக்க வேண்டும் என MASFIH வலியுறுத்துகிறது.

Scroll to Top