புத்ராஜெயா, 27 அக்டோபர் 2026 : மலேசிய மடானி அரசு, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம், நாடு முழுவதும் உள்ள 164 இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் RM3.28 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.
தர்மா மடானி மற்றும் ஹார்மோனி மடானி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இந்த நிதி, வழிபாட்டுத் தலங்களைச் சமய நடவடிக்கைகளுக்கான இடங்களாக மட்டுமின்றி, சமூக மேம்பாட்டுக்கான மையங்களாகவும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹார்மோனி மடானி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 57 சீக்கிய குருத்வாராக்கள் மற்றும் 12 தேவாலயங்கள் என மொத்தம் 69 வழிபாட்டுத் தலங்களுக்கு RM1.38 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் RM20,000 வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, தர்மா மடானி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 95 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு RM1.9 மில்லியன் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தர்மா மடானி திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மொத்த நிதி RM15.42 மில்லியனாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 771 இந்து வழிபாட்டுத் தலங்கள் பயன்பெறுகின்றன.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் வழிபாட்டுத் தலங்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்த நிதியுதவி, கல்வி, ஆன்மிக வளர்ச்சி, நற்பண்புகளை மேம்படுத்துதல், கலாசாரம் மற்றும் இளைய தலைமுறையினரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகுதியுடைய வழிபாட்டுத் தலங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம், இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதுடன், நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க முடியும் என மடானி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.







