கோலாலம்பூர், 25 அக்டோபர் 2026 : வியன் பயிலகம் மற்றும் வியன் பதிப்பகம் இணைந்து வெளியிட்ட ‘அறிதி’ நூல் வெளியீட்டு விழா, விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள சோமா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. 21 மாணவர் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய தமிழ்–ஆங்கில இருமொழித் தொகுப்பான ‘அறிதி’, தமிழ்ப் பழமொழிகளையும் அவை உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்களையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
விழாவில் உரையாற்றிய வியன் பயிலகத்தின் நிறுவனர் ஆசிரியர் வனிதா, பழமொழிகளைக் கற்பதை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கம் என்றார். தம்மிடம் தமிழ் எழுத்தான ‘அ’ எழுதத் தொடங்கிய மாணவர்கள், இன்று சித்திரக்கதைகளை உருவாக்கும் இளம் எழுத்தாளர்களாக வளர்ந்திருப்பது பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



வழக்கமான நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலிருந்து மாறுபட்டு, மாணவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் பட்டிமன்றம், நாடகம், கதை சொல்லல், பழமொழி வினாடி வினா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், ‘அறிதி’ நூல் உருவான விதம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆசிரியர் வனிதா, அவரது மகன்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு முயற்சியில் இவ்விழா சிறப்பாக அமைந்தது. குழந்தைகள் பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கற்க வேண்டும் என்ற வியன் பயிலகத்தின் கல்வி நோக்கத்தை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது. பழமொழிகளை மனப்பாடம் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அவற்றின் பொருளைப் புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கற்க மாணவர்களை ஊக்குவிப்பதிலும் ‘அறிதி’ நூல் முக்கியப் பங்காற்றுகிறது.
தமிழ் மொழிக் கல்வியில் படைப்பாற்றலை ஊக்குவிப்பதோடு, பாரம்பரிய அறிவையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.







