கோலாலம்பூர், 25 அக்டோபர் 2026 : மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளரும், மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியருமான திரு. பி.ஆர். ராஜன் காலமானார். சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அவரது மறைவு, மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது.
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.
1958ஆம் ஆண்டு கெடா மாநிலம் சுங்கைப்பட்டாணியில் பூபாலன்–ரத்னா தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்த ராஜன், இளம் வயதில் குடும்பத்துடன் சுங்கை பூலோவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் கோலாலம்பூரின் ஜின்ஜாங் உத்தாரா பகுதிக்குக் குடிபெயர்ந்து இடைநிலைக் கல்வியை முடித்தார்.
1976ஆம் ஆண்டு தமிழ்மலர் நாளிதழில் செய்தியாளராகப் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழில் ஓராண்டு காலம் பணியாற்றினார். தொடர்ந்து மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறைக்குத் திரும்பிய அவர், வள்ளல் ஆறுமுகம் பிள்ளை நடத்திய தமிழ்மலர் நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்மலர் நாளிதழ் மூடப்பட்ட பின்னர் தொடங்கப்பட்ட தினமணி நாளிதழிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றி, பல்வேறு அனுபவமிக்க பத்திரிகையாளர்களுடன் இணைந்து செய்திப் பணிகளை மேற்கொண்டார்.
ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் சிறந்து விளங்கிய ராஜன், குற்றச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய செய்திகளையும் சேகரித்து வெளியிட்டார். கெர்லிங் கொலை வழக்கு, மலேசிய அழகி ஜீன் பிரேரா கொலை வழக்கு உள்ளிட்ட பரபரப்பான வழக்குகள் தொடர்பான செய்திகளை அவர் வழங்கியுள்ளார்.
செய்தி சேகரிப்பு, மொழிபெயர்ப்பு, செய்தி ஆசிரியர் பணி எனப் பத்திரிகைத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் நீண்ட அனுபவம் பெற்றிருந்த அவர், தனது தொழில்முறைத் திறமையால் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
பத்திரிகைப் பணியுடன் விளையாட்டுச் செய்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராஜன், மெர்டேக்கா கிண்ணக் கால்பந்துப் போட்டிகள், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் கால்பந்துப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளைச் செய்தியாக வழங்கினார்.
1985ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டாளர் சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மெர்டேக்கா அரங்கம் மற்றும் நெகாரா அரங்கம் ஆகியவற்றை நிர்வகிக்கும் செயற்குழுக்களிலும் உறுப்பினராகச் சேவையாற்றியுள்ளார்.
மலேசியப் பத்திரிகையாளர் கழகம் நடத்திய போட்டியில் சிறந்த இளம் தமிழ்ப் பத்திரிகையாளராகத் தேர்வு செய்யப்பட்ட ராஜன், அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் குடியரசாக இருந்த உஸ்பெகிஸ்தானுக்கு மலேசியப் பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட நல்லெண்ணப் பயணத்திலும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.
இளம் வயதிலிருந்தே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது தந்தை பூபாலனும் அக்காலத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
அரை நூற்றாண்டு காலமாக மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் தனது பங்களிப்பை வழங்கிய பி.ஆர். ராஜனின் மறைவு, பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழ் ஊடக உலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







