என் தமிழ்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு முதல் பதக்கம் : கராத்தே வீரர் தெவெந்திரன் வெண்கலம் வென்றார்

ஜப்பான், 21 செப்டம்பர் 2026 : 2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கான முதல் பதக்கத்தை கராத்தே வீரர் தெவெந்திரன் கலியானா சுந்தரம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 55 கிலோவுக்குட்பட்ட கராத்தே குமிட்டே பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், நேபாளத்தின் ராகேஷ் மானந்தரை 9–1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தெவெந்திரன் வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார்.

ஐச்சியில் உள்ள டொயோஹாஷி ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தெவெந்திரன் ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆறு ‘யுகோ’ புள்ளிகளையும் ஒரு ‘இப்போன்’ புள்ளியையும் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் 2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் பதக்கப் பட்டியலை தெவெந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.

அதே 55 கிலோ எடைப் பிரிவில் தெவெந்திரன் முன்னதாக SEA Games தங்கப் பதக்கம் வென்ற வீரராகவும் உள்ளார். மலேசிய அணிக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த தெவெந்திரனுக்கு விளையாட்டுத் துறையினர் மற்றும் மலேசிய மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top