மலாக்கா, 21 செப்டம்பர் 2026 : மலேசியா தொடர்ந்து அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களுக்குமான நாடாக விளங்குவதற்கு, நாட்டின் மக்கள் ஒற்றுமைக்கான உறுதிமொழியைப் புதுப்பிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் எந்தவொரு இனத்தையும் ஒதுக்காமல், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாடாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதில் தாம் ஒருபோதும் சமரசம் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்தார். மலாக்கா, கோட்டா சியாபந்தரில் உள்ள என்கோர் மெலாக்காவில் நடைபெற்ற 41ஆவது மலேசிய சீனக் கலாசார விழாவின் தொடக்க நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவின் சமூக, கலாசார மற்றும் அரசியல் சூழல் தற்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்காத கருத்துகளும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் நலன்களை மட்டும் முன்னிறுத்தும் முயற்சிகளும் இன்னும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் இன மற்றும் கலாசார பன்முகத்தன்மை மக்களைப் பிரிப்பதற்கான காரணமாக இல்லாமல், அனைவருக்கும் பொதுவான பலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் எதிர்கால தலைமுறையினருக்காக இந்தப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும், மலாய், சீன, இந்திய, சபா மற்றும் சரவாக் மக்களை உள்ளடக்கிய அனைத்து சமூகங்களும் நாட்டின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மலேசியாவின் நிலைத்தன்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் அடிப்படையாக விளங்கும் பொதுவான வலிமையை மீண்டும் நிலைநிறுத்துமாறு அனைத்து மக்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.







