கோலாலம்பூர், 17 செப்டம்பர் 2026 : மலேசியாவின் மதானி அரசு, பொதுமக்களின் மின்சார கட்டணச் சுமையை குறைக்கும் வகையில், வீட்டு மின்சாரப் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாதத்திற்கு 600 kWh-லிருந்து 800 kWh ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை செப்டம்பர் முதல் டிசம்பர் 31, 2026 வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாதத்திற்கு 800 kWh வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு பயனாளர்களுக்கு Automatic Fuel Cost Adjustment (AFA), சில்லறை கட்டணம் மற்றும் விற்பனை மற்றும் சேவை வரி (SST) ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படும்.
சமீபத்திய ஆலங்கட்டி மழை மற்றும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக சில வீடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மாதாந்திர மின்சாரப் பயன்பாடு 600 kWh-ஐ தாண்டி, வழக்கத்தை விட அதிகமான கட்டணங்கள் ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை விரைவாக செயல்படுத்த உதவிய Tenaga Nasional Berhad (TNB), PETRA மற்றும் எரிசக்தி ஆணையம் ஆகியவற்றுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய எரிசக்தி சந்தை நிலவரங்களை MADANI அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான முடிவுகளில் பொதுமக்களின் செலவுச் சுமை, மின்சார விநியோக பாதுகாப்பு மற்றும் நாட்டின் எரிசக்தித் துறையின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







