என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் “ஆலயம் செல்வோம்” நிகழ்ச்சி : 100 பக்தர்கள் பங்கேற்பு

தாப்பா, 17 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில ஆலய மற்றும் சமயப் பிரிவின் ஏற்பாட்டில் “ஆலயம் செல்வோம்” ஆன்மிக நிகழ்ச்சி தாப்பாவில் உள்ள சத்குரு ஸ்ரீ ஜெகநாதர் ஆத்ம நிலையத்தில் நடைபெற்றது. இதில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 100 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கோமாதா பூஜை, பஜனை, சிறப்பு பிரார்த்தனை, தீப ஆராதனை மற்றும் அர்ச்சனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் மூலம் பக்தர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு, ஆன்மிக நிறைவைப் பெற்றனர்.

பஜனை நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்கம் நிபோங் தேபால் கிளைத் தலைவர் திரு. ஜெகதீசன் மற்றும் மலேசிய இந்து சங்கம் சுங்கை பக்காப் கிளை துணைத் தலைவர் தொண்டர்மணி திருமதி காந்திமதி ஆகியோர் இணைந்து நடத்தினர். மேலும், பக்தர்கள் தங்களால் இயன்ற அளவில் ஆலயத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்களை தன்னார்வமாக வழங்கினர். இந்த பங்களிப்புகள் ஆலயத்தின் தேவைகளுக்கு உதவியாக அமைந்தன.

இந்நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில துணைத் தலைவரும் ஆலய மற்றும் சமயப் பிரிவு தலைவருமான விவேக ரத்னா சத்தியசீலன் சுப்பிரமணியம் மற்றும் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில உதவிப் பொருளாளரும் ஆலய மற்றும் சமயப் பிரிவு துணைத் தலைவருமான விவேக ரத்னா பூங்கொடி பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆலய மற்றும் சமயப் பிரிவு செயலாளர் திருமதி செல்வியும் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தார்.

நிகழ்ச்சிக்கு ஆலயத் தலைவர் மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் 1 ஸ்ரீ காசி சங்கரரத்னா டத்தோ ஆர். மோகன் ஷான், ஆலய நிர்வாகப் பிரதிநிதி விவேகரத்னா மகேந்திரன் முருகன் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர்.

ஆலய நிர்வாகம், அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் காலை உணவு மற்றும் மதிய உணவை இலவசமாக வழங்கியது. “ஆலயம் செல்வோம்” நிகழ்ச்சி பக்தர்களிடையே ஆன்மிக நட்பு, இறை பக்தி மற்றும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியதுடன், அனைவருக்கும் நினைவில் நிற்கும் ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

Scroll to Top