சரவாக், 17 செப்டம்பர் 2026 : மலேசியா தினம் 2026 கொண்டாட்டம் சரவாக் மாநிலம் கூச்சிங்கில் உள்ள போர்னியோ கூச்சிங் மாநாட்டு மையத்தில் (BCCK) நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 6,000 பேர் கலந்து கொண்டனர்.
சரவாக் மாநில ஆளுநர் துன் பெஹின் ஸ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் பிரதமர் டத்தோ பதிங்கி தான்ஸ்ரீ டாக்டர் அபாங் ஹாஜி அப்துல் ரஹ்மான் ஜோஹாரி மற்றும் சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ பாங்லிமா ஹாஜி ஹாஜிஜி ஹாஜி நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் ‘Segulai Sejalai’ என்ற வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து மலேசியா தினம் 2026 சிறப்பு நினைவுப் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும், ‘Malaysiaku MADANI, Kesejahteraan Dinikmati’ என்ற இசை நாடகமும், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் ‘Serumpun MADANI’ நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன.


தொடர்பு அமைச்சர் மற்றும் 2026 தேசிய தினக் கொண்டாட்டங்களின் தலைமைக்குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், சரவாக் சுற்றுலா, படைப்புத் தொழில் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா உள்ளிட்ட மத்திய, சரவாக் மற்றும் சபா மாநில அமைச்சர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், மலேசிய தகவல் துறை தலைமை இயக்குநர் துவான் எர்வின் கைருல் அஹ்மத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், மலேசியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.







