குஜராத், 01 நவம்பர் 2026 : காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதே தொடரின் மகளிர் பிரிவில் உகாண்டா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணியும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 54–20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை அணி கென்யாவைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி உகாண்டாவை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி 35–15 என்ற புள்ளிகள் கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்திய அணிகளின் சிறப்பான ஆட்டம் கபடி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







