என் தமிழ்

முஹைதீன் யாசின் வழக்கு : வழக்கை நிறுத்திய முடிவுக்கு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

புத்ராஜெயா, 16 செப்டம்பர் 2026 : டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் மீதான வழக்கின் ஒரு பகுதியைத் தொடராமல் நிறுத்தியதற்கான காரணங்களை தலைமை வழக்கறிஞர் விரிவாக விளக்க வேண்டும் என டிஏபி தேசியத் தலைவரும் டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

முஹைதீன் யாசின் மீதான குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் வழக்கைத் தொடராமல் ‘விடுதலை அல்லாத வழக்கு முடிவு’ (DNAA) கோரப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர் நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்போது, வழக்குத் தொடரும் தரப்பு ஆதாரங்களை முழுமையாக மதிப்பீடு செய்து, வழக்கைத் தொடருவதற்கான வலுவான அடிப்படை இருப்பதை உறுதி செய்திருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு தீவிரமாக நடைபெற்று வந்தபோது, தற்போது அதை நிறுத்துவதற்கான முடிவை எடுக்க காரணமான குறிப்பிட்ட அம்சங்கள் அல்லது சட்டரீதியான பரிசீலனைகள் என்ன என்பதை தலைமை வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால், முடிவெடுக்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் வழக்குகள் தெளிவான காரணங்களும் முழுமையான விளக்கமும் இன்றி இடைநடுவில் நிறுத்தப்பட்டால், தலைமை வழக்கறிஞர் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும், குற்றவியல் நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என அவர் கூறினார்.

எனவே, இன்று நீதிமன்றத்தில் வழக்கைத் தொடராமல் நிறுத்தக் கோரி முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கான துல்லியமான காரணங்களை தலைமை வழக்கறிஞர் பொதுமக்களுக்கு வெளிப்படையாக விளக்க வேண்டும் என கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top