கோலாலம்பூர், 16 செப்டம்பர் 2026 : மலேசியா தினம், நாட்டின் ஒற்றுமை மற்றும் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை நினைவுபடுத்தும் முக்கிய நாளாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடு உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு, மாநிலங்களுக்கும் கூட்டாட்சிக்கும் இடையிலான பிணைப்பு, விசுவாசம் மற்றும் நீதி ஆகியவை முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், நாட்டின் பயணத்தில் சில காலங்களில் இனப் பிரச்சினைகள் அதிகமாக முன்னிறுத்தப்பட்டதுடன், பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியும் விரிவடைந்ததாக அன்வார் கூறினார். மக்களிடையே உள்ள வேறுபாடுகள் பிரிவினைக்கான சுவர்களாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 16ஆம் தேதி, எந்தவொரு பிராந்தியமும் புறக்கணிக்கப்படாது என்பதையும், எந்த இனத்தவரும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடாது என்பதையும், நாட்டின் முன்னேற்றப் பாதையில் எந்தக் குடிமகனும் பின்தங்கக்கூடாது என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடல் நம்மை பிரித்தாலும், நாட்டின் இலட்சியங்களும் எதிர்கால நம்பிக்கைகளும் நம்மை பிரிக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம், அனைவருக்கும் மலேசியா தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.







