கோலாலம்பூர், 12 செப்டம்பர் 2026 : தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் 2-ஆவது அனைத்துலக ஔவை தமிழ் இலக்கிய மாநாடு வரும் நவம்பர் 28, 29-ஆம் தேதிகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. “அறம் செய்ய விரும்பு!” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நடைபெறும் இம்மாநாடு, ஔவையாரின் இலக்கியப் படைப்புகள், சிந்தனைகள் மற்றும் அவற்றின் சமகாலப் பொருத்தங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்வதற்கான தளமாக அமையவுள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் மலேசியப் பேராளர்களுக்கான கட்டணம் RM200 ஆகவும், வெளிநாட்டுப் பேராளர்களுக்கான கட்டணம் 120 அமெரிக்க டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பேராளர்களுக்கான தங்குமிடம், குறிப்பிட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் கோலாலம்பூர் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஏற்பாடுகளும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படவுள்ளன.
பேராளர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி மற்றும் இரவு உணவு வழங்கப்படும். மேலும் மாநாட்டுப் பை, எழுதுபொருள்கள், பெயர்ப் பட்டை, மாநாட்டு மலர், ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல், சான்றிதழ்கள் மற்றும் ஔவையாரின் அறுநூல்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படவுள்ளன.
மாநாட்டை முன்னிட்டு ஆய்வுக் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. ஔவையார் பாடல்களில் வெளிப்படும் செயற்கை நுண்ணறிவு கோட்பாடுகள், அறிவியல் சிந்தனைகள், எதிர்காலவியல் கருத்துகள், மனிதநேயம், தன்னம்பிக்கை சிந்தனைகள், சமூக நல்லிணக்கம், பொருளாதார சிந்தனை, பெண்களின் ஆளுமைத் தன்மைகள் மற்றும் தமிழ் மரபுசார் கருத்துகள் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
கட்டுரைகள் மூன்று பக்கங்களுக்குள், யுனிகோட் எழுத்துருவில் 12 அளவில் அமைந்திருக்க வேண்டும். கட்டுரைகளை அனுப்புவதற்கான இறுதி நாள் அக்டோபர் 15, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டின் வெற்றிக்காக தமிழ் ஆர்வலர்கள், நல்லுள்ளம் கொண்டோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. நன்கொடை வழங்குவோருக்கு அதிகாரப்பூர்வ பற்றுச்சீட்டு வழங்கப்படுவதுடன், மாநாட்டில் சிறப்பு செய்யப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டுத் தலைவராக சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் ஔவை முருகன் கண்ணன் AMN, AMSவும், துணைத் தலைவராக தேசிய இடைநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அவேதன் செல்லப்பனும் செயல்படுகின்றனர்.
மாநாட்டுப் புரவலர்களாக டான் ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், பா. சாதேவன் மற்றும் வேந்தர் ஸ்ரீ பா. தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஔவை முருகன் கண்ணன், ராமசாமி நடேசன், தமிழரசு சுப்பிரமணியம் மற்றும் ஸ்வேடன் செல்லப்பன் ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.









