கோலாலம்பூர், 11 செப்டம்பர் 2026 : மலேசிய இந்திய சமூகத்தின் தொழில்முனைவு, கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் RM59.76 மில்லியன் மதிப்பிலான 7 புதிய MADANI Uyarvu தொடர் 2 திட்டங்களை மனிதவள அமைச்சகம் (KESUMA), மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (MITRA) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டங்கள் 20,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் 600 நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உதவி வழங்கும் நிகழ்ச்சி மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் KLSICCI தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் தேகராஜன் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் பிரவின் செல்வம் தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில்முனைவோர் மேம்பாட்டுக்காக Uyarvu MADANI 2.0 திட்டத்தின் கீழ் RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த 1,400 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும். இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
உயர்கல்வித் துறையில் 5,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு டிஜிட்டல் சாதனங்களும், மேலும் 5,000 மாணவர்களுக்கு தலா RM2,000 ஆரம்பகட்ட கல்வி உதவியும் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும்.
பள்ளிக் கல்வித் துறையில் 358 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 Smart Board-கள் வழங்கப்படவுள்ளதுடன், SPM மற்றும் STPM தமிழ் மொழித் திட்டத்தின் மூலம் 8,690 மாணவர்கள் பயனடைய உள்ளனர். சமூக மேம்பாட்டுக்காக HARMONI MADANI திட்டத்தின் கீழ் RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டு, 250 குருத்வாராக்கள் மற்றும் இந்திய தேவாலயங்கள் வரை பயனடையும் வகையில் உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், மெலாகாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கு குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டங்கள் மலேசிய இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என KLSICCI நம்பிக்கை தெரிவித்துள்ளது. KESUMA, MITRA மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க KLSICCI உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







