கோலாலம்பூர், 10 செப்டம்பர் 2026 : மலேசிய இந்திய சமூகத்தின் மனிதவளம், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக நலனை வலுப்படுத்தும் வகையில், மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (MITRA), மொத்தம் RM59.76 மில்லியன் மதிப்பிலான 7 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட ‘மடானி’ உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. இந்த விரிவான திட்டத் தொகுப்பு, இந்திய சமூகத்தின் மனிதவளம் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன், சமூகப் பொருளாதார இடைவெளியைக் குறைத்து, அடிமட்ட நிலையில் இருந்து சமூக முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தொழில்முனைவோர் துறையில், ‘உயர்வு மடானி 2.0’ திட்டத்துக்காக மொத்தம் RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை RM25 மில்லியன் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 1,400 நிறுவனங்கள் பயனடையும் வகையில் உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13, 2026 வரை திறந்திருக்கும்.
உயர்கல்வித் துறையில், ‘பெரந்தி மடானி’ திட்டத்தின் கீழ் RM13.25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் ஆண்டில் 5,000 பி40 மற்றும் எம்40 பிரிவு மாணவர்களுக்கு மின்னியல் சாதனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதனுடன், ‘சிறப்பு மடானி மாணவர் உதவித் திட்டத்தின்’ கீழ் RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டு, 5,000 பி40 மாணவர்களுக்கு தலா RM2,000 கல்வி உதவி வழங்கப்படவுள்ளது. இந்த உதவி குடும்பங்களின் கல்விச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இவ்விரு உயர்கல்வித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையில், 2026-ஆம் ஆண்டுக்கான ‘ஸ்மார்ட் போர்டு’ தகவல் தொடர்புத் தொழில்நுட்ப உபகரணத் திட்டத்துக்கு RM5.36 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 358 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், கல்வி அமைச்சுடன் இணைந்து தமிழ்மொழி எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுத் தயாரிப்புக்காக RM900,680 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,690 மாணவர்கள் பயனடைவார்கள்.
சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், ‘ஹார்மோனி மடானி’ திட்டத்துக்கு RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள 250 வழிபாட்டுத் தலங்களுக்கு தலா RM20,000 வழங்கப்பட்டு, அவை சமூகக் கற்றல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான மையங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13, 2026 வரை திறந்திருக்கும்.
இதனுடன், RM250,000 மதிப்பிலான குற்றத் தடுப்புத் திட்டமும் மலேசிய குற்றத் தடுப்பு அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மலாக்காவில் உள்ள 700 தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய திட்டங்கள், இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி இடைவெளியைக் குறைத்து, பி40 மற்றும் எம்40 பிரிவுகளைச் சேர்ந்த மக்களை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து இணைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
உதவிகள் திறமையாகவும் சமமாகவும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களுடன் மூலோபாய ரீதியிலான ஒத்துழைப்பை MITRA தொடர்ந்து மேற்கொள்ளும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.







