என் தமிழ்

CelcomDigi-யின் ‘Sophia AI’ அறிமுகம் : சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான Agentic AI

சிலாங்கூர், 08 செப்டம்பர் 2026 : மலேசியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) தங்களது வணிகச் செயல்பாடுகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், ‘Sophia AI’ என்ற Agentic AI தொழில்நுட்பத்தை CelcomDigi வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான AI போல தகவல்களை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், Sophia AI பணிகளை தானாக மேற்கொள்ளவும், பல்வேறு கணினி அமைப்புகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கவும், வணிகச் செயல்முறைகளை ஒருங்கிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், SMEs மத்தியில் AI பயன்பாடு இன்னும் சீரற்ற நிலையில் இருப்பதாக நிதி அமைச்சின் 2026 பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது. முதலீட்டில் கிடைக்கும் பலன் குறித்த நிச்சயமின்மை மற்றும் SMEs-க்கு ஏற்ற AI தளங்களுக்கான குறைந்த அணுகல் ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளன.

இந்த நிலையில், பெரிய தொழில்நுட்பக் குழுக்களை உருவாக்கவோ அல்லது நிறுவனத்தின் முழு செயல்பாடுகளையும் மாற்றியமைக்கவோ தேவையில்லாமல், தங்களது முக்கியமான பணிகளில் AI-ஐ பயன்படுத்தி டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த Sophia AI உதவும் என CelcomDigi தெரிவித்துள்ளது.

CelcomDigi நிறுவனத்தின் Enterprise Business பிரிவு தலைமை அதிகாரி T. Kugan கூறுகையில், நிறுவனத்தின் சொந்த செயல்பாடுகளில் 400-க்கும் மேற்பட்ட தானியங்கி செயல்முறைகளைப் பயன்படுத்தி செலவுகளைக் குறைத்ததுடன், வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

சில்லறை விற்பனை மற்றும் விநியோகத் துறைகளில், invoice-ஐ சரிபார்ப்பது முதல் பணம் செலுத்தும் செயல்முறை வரை பல பணிகளை Sophia AI தானியக்கமாக மேற்கொள்ள முடியும். உற்பத்தி, சுகாதாரம் மற்றும் அரசு துறைகளிலும் கொள்முதல், ஆவணச் சரிபார்ப்பு, நியமனங்கள், billing மற்றும் பொதுமக்களின் விசாரணைகள் போன்ற பல்வேறு செயல்முறைகளை எளிதாக்கும் திறன் இதற்கு உள்ளது.

மேலும், ஒவ்வொரு நிறுவனத்தின் அளவு, தேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப Sophia AI-ஐ மாற்றியமைக்க முடியும். நிறுவனங்களுக்கு அதிக பயன் தரக்கூடிய பணிகளை முதலில் அடையாளம் காண்பது முதல், ஏற்கனவே உள்ள அமைப்புகளுடன் AI-ஐ ஒருங்கிணைத்து அதன் செயல்திறனை மதிப்பிடுவது வரை CelcomDigi ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய இணைப்பு, 5G, cloud, தரவு, cybersecurity, IoT மற்றும் automation உள்ளிட்ட CelcomDigi-யின் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைந்து Sophia AI வழங்கப்படுவதால், எதிர்காலத்தில் தனித்தனி AI கருவிகளைத் தாண்டி, AI அடிப்படையிலான முழுமையான வணிகச் செயல்பாடுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Scroll to Top