04 செப்டம்பர் 2026 : நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மேஜர் முனுசாமி, தற்போது சிறந்த எழுத்தாளராக உருவெடுத்து சமூகத்தின் உணர்வுகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் M.E.K. தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
மேஜர் முனுசாமியின் ‘பசுமை மண்’ நூல் வெறும் கற்பனைக் கதைகளின் தொகுப்பாக இல்லாமல், 1960-களில் இருந்து இன்றுவரை தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அவர்களின் வாழ்வியல் உண்மைகளைப் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்களையும் சமூக விழிப்புணர்வையும் வழங்கும் உயர்ந்த நோக்கத்துடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மனிதநேயமும் சமூகத்தின் உண்மை நிலைகளும் பிரதிபலிப்பதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.
சமூகத்தின் வரலாற்றையும் வாழ்வியல் அனுபவங்களையும் பதிவு செய்யும் ‘பசுமை மண்’ நூல் வெற்றியடைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.







