புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் 2026 : மலேசியாவின் 69ஆவது தேசிய தினம் புத்ராஜெயா சதுக்கத்தில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் மனிதவள அமைச்சின் பிரதிநிதியாக ராமணன் ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மாமன்னரின் துணைவியார் ராஜா ஸரித் சோபியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஜாலூர் கெமிலாங் கொடிகள் பட்டொளி வீச, பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தேசிய தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர். ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் விழா அமைந்திருந்தது.



இந்நிலையில், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ, இந்தாண்டு தேசிய தின அணிவகுப்பில் பொருளாதார அணிக்கு தலைமை தாங்கும் பெருமையைப் பெற்றது. இது மனிதவள அமைச்சின் சமூகத்திற்கே கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரம் எனக் குறிப்பிட்ட ராமணன் ராமகிருஷ்ணன், அணிவகுப்பில் உற்சாகத்துடன் பங்கேற்று அமைச்சின் பெயரை உயர்த்திய பெர்கேசோ குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூண்களாக விளங்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பங்களிப்புகளையும் பெர்கேசோ அணியினர் பிரதிபலித்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், தேசிய தின விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக உழைத்த அனைத்து பங்கேற்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மலேசியர்கள் ஒன்றிணைந்து தேசிய தினத்தைக் கொண்டாடியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இதுவே நாம் விரும்பும் ஒற்றுமையான மலேசியாவின் முகம்,” என ராமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். Malaysia MADANI: Kesejahteraan Dinikmati என்ற கொள்கையின் அடிப்படையில், ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் மலேசியா தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.







