கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் 2026 : கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் மகாராஜா பட்டு மாளிகை புதிதாக திறப்பு விழா கண்டுள்ளது. இப்புதிய பட்டுமாளிகையில் பல்வேறு வகையான பட்டுப்புடவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடையின் பிரம்மாண்டமான அமைப்பும், பல்வேறு வடிவங்கள் மற்றும் ரகங்களில் வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டுப்புடவைகளும் வாடிக்கையாளர்களின், குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.இ.கே. தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, இந்திய சமூகத்தினரின் தொடர்ச்சியான வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கல்வியறிவு பெற்ற சமூகமாக வளர்ந்துள்ள இந்தியர்கள் தற்போது வர்த்தகத் துறையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும், இந்தியர்களின் இத்தகைய புதிய வர்த்தக முயற்சிகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.
இந்தப் புதிய வர்த்தக முயற்சி பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இந்திய சமூகத்தின் வணிக வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







