கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் 2026 : மலேசிய பார்வையற்றோர் சங்கம், வங்க் முஆமலாத் மலேசியா பெர்ஹாட் ஏற்பாடு செய்த தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் “மலேசியா நம்முடையது, கதை நம்முடையது” எனும் பிரசாரத் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி லாமான் வாரிசான், ஜாலான் மெலாக்கா, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் பாடல் குழுவினர் தேசப்பற்று பாடல்களைப் பாடி, தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். பார்வைக் குறைபாடுடையோரின் திறமையையும் தேசப்பற்று உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த இசை நிகழ்ச்சி, நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, வங்க் முஆமலாத் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மலேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு 8,000 ரிங்கிட் நன்கொடையும் வழங்கப்பட்டது.
சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தப் பங்களிப்பு அமைந்துள்ளது. பார்வைக் குறைபாடுடையோரின் நலன் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்க் முஆமலாத் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு மலேசிய பார்வையற்றோர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.







