கோலாலம்பூர், 26 ஆகஸ்ட் 2026 : மாணவர்களிடையே கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தலைத் தடுக்கும் நோக்கில், சான் பெங் தமிழ்ப்பள்ளியில் 2026ஆம் ஆண்டுக்கான பள்ளி அளவிலான ‘SAFE’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 8.10 மணி வரை பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தேசிய கீதம், மாநில கீதம் மற்றும் பள்ளிப் பாடல் பாடப்பட்டதுடன், பிரார்த்தனை மற்றும் உறுதிமொழியும் இடம்பெற்றன.
பள்ளியில் பாதுகாப்பான, நேர்மறையான மற்றும் கொடுமைப்படுத்துதல் இல்லாத சூழலை உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களிடையே கொடுமைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் முறைகளை கற்றுக்கொடுப்பது, ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள ஊக்குவிப்பது ஆகியவையும் திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி சமூகத்தினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இத்திட்டம் வலியுறுத்துகிறது.
“பாதுகாப்பான பள்ளி, சிறந்த மாணவர்கள், கொடுமைப்படுத்துதலற்ற எதிர்காலம்” என்ற கருத்தை முன்னிறுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டம் பள்ளியில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.







