கோலாலம்பூர், 26 ஆகஸ்ட் 2026 : ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2025ஆம் ஆண்டில் பதிவான 4.3 சதவீதத்திலிருந்து, 2026ஆம் ஆண்டில் 4.2 சதவீதமாக மிதமடையும் என மூடீஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. 2027ஆம் ஆண்டில் வளர்ச்சி மேலும் குறைந்து 3.6 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் விலைகள் மற்றும் கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பிராந்தியத்தின் தேவைகள் பாதிக்கப்படலாம் என்றும், ஆசிய-பசிபிக் பொருளாதாரங்கள் இருவேறு வேகங்களில் வளர்ந்து வருவதாகவும் மூடீஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையின் வேகமான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் ஏற்படக்கூடிய பெரிய சரிவை ஓரளவு தடுத்துள்ளதாகவும், அதேவேளை குறைக்கடத்திகள் மற்றும் பிற தொழில்நுட்பப் பொருட்களுக்கான அதிகரித்த தேவையால் தைவான், தென் கொரியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளின் ஏற்றுமதிகள் வலுவடைந்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நீடித்து வரும் மேற்கு ஆசிய மோதல், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது மற்றும் அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகள் ஆகியவை புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக அதிர்வுகளை அதிகரித்து, விலைவாசி உயர்வுக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் நீடித்து, எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், மத்திய வங்கிகள் மேலும் கடுமையான பணவியல் கொள்கைகளை செயல்படுத்தக்கூடும் என்றும் மூடீஸ் அனலிட்டிக்ஸ் எச்சரித்துள்ளது. எனினும், மேற்கு ஆசிய மோதல் தணியும் என்றும், அதன் காரணமாக ஏற்படும் பணவீக்க உயர்வு தற்காலிகமாகவே இருக்கும் என்றும் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.







