சிலாங்கூர், 25 ஆகஸ்ட் 2026 : குவாங் சந்திப்புப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுடன் தொடர்புடைய குவாங் அருள்மிகு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் விவகாரத்திற்கு, அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில அரசின் அணுகுமுறைக்கு LIMAS இணைத் தலைவர் பப்பாரைடு வரமன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம் மூலம் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றாலும், அப்பகுதி மக்களின் நலன்களும் வழிபாட்டுத் தலங்களின் தேவைகளும் மதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கோயில் சமூகத்தினர், Sime Darby, Kuang சட்டமன்ற உறுப்பினர் YB Tuan Mohd Rafiq, EXCO அலுவலகம் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட சில கோயில்களை நிர்ணயிக்கப்பட்ட Non-Islamic House of Worship (RIBI) புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்காக 1.08 ஏக்கர் பரப்பளவிலான புதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஆலய சமூகத்தினர் தீர்வை ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்திருப்பது முதிர்ச்சியான மற்றும் பொறுப்பான அணுகுமுறை என பப்பாரைடு வரமன் பாராட்டினார். எட்டப்பட்ட உடன்பாடு வாய்மொழியாக மட்டுமின்றி, கோயில் சங்கத்தின் பிரதிநிதி கையெழுத்திட்ட Agreement/My Promise கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உடன்பாட்டின்படி, கோயில் கட்டமைப்புகளை புதிய இடத்திற்கு மாற்றுதல், மேடைகள் மற்றும் வேலிகள் அமைத்தல், தற்காலிக அணுகல் பாதைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 5 மார்ச் 2026 தேதியிட்ட Agreement Letter/My Promise கடிதத்தில், மதிப்புமிக்க பொருட்களை புதிய இடத்திற்கு மாற்றுதல், தற்போதைய கட்டமைப்புகளை அகற்றுதல் மற்றும் பழைய இடத்தைத் துப்புரவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஒத்துழைத்த கோயில் சமூகத்தினர், Sime Darby, Kuang சட்டமன்ற உறுப்பினர், EXCO அலுவலகம் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பப்பாரைடு வரமன் நன்றி தெரிவித்தார்.
வளர்ச்சிப் பணிகளும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூகத்தின் நலன்களும் இணைந்து செல்ல முடியும் என்பதை குவாங் விவகாரம் எடுத்துக்காட்டுவதாகவும், எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








