என் தமிழ்

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு புரூணை சுல்தான் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

புரூணை, 23 ஆகஸ்ட் 2026 : மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு புரூணை சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா, ‘தர்ஜா கெராபட் லைலா உத்தமா யாங் அமாட் திஹோர்மதி’ (D.K.) என்ற உயரிய அரச விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இந்த விருது ‘டத்தோ லைலா உத்தமா’ என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்குகிறது.

பந்தர் செரி பெகவானில் உள்ள இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருது அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்டது. புரூணை பட்டத்து இளவரசர் அல்-முஹ்ததீ பில்லா உள்ளிட்ட அரச குடும்பத்தினர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹமட் ஹசன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி, சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபங், சபா முதல்வர் ஹாஜிஜி நூர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மலேசியா – புரூணை இடையேயான நீண்டகால நட்பு, நெருக்கமான இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரூணை சுல்தானின் இந்த விருது தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு உறவு மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக இந்த அங்கீகாரத்தை அவர் வரவேற்றுள்ளார்.

அன்வார் இப்ராகிம் இரண்டு நாள் பணிப் பயணமாக புரூணை சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற 27-வது மலேசியா – புரூணை ஆண்டுத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், பேரிடர் மேலாண்மையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் அன்வார் இப்ராகிம் மற்றும் புரூணை சுல்தான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மலேசியா – புரூணை உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.

Scroll to Top