என் தமிழ்

பினாங்கில் இந்தியத் தொழில்முனைவோர் கருத்தரங்கம் : அக்டோபர் 9 முதல் 11 வரை நடைபெறுகிறது

பினாங்கு, 07 அக்டோபர் 2026 : மலேசிய இந்தியத் தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், புதிய வணிக வாய்ப்புகளையும் வர்த்தகத் தொடர்புகளையும் உருவாக்கும் நோக்கில், ‘Indian Entrepreneurs Seminar – North Region’ எனும் வடக்கு பிராந்திய இந்தியத் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

மாயன் வென்ச்சர் (Mayan Venture) மற்றும் யாயாசான் சுவாரா ராக்யாட் மலேசியா (Yayasan Suara Rakyat Malaysia) இணைந்து ஏற்பாடு செய்யும் இந்நிகழ்வு, 2026 அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி வரை பினாங்கு, பேயான் பாருவில் உள்ள சன்ஷைன் பாங்குவெட் ஹாலில் நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இக்கருத்தரங்கில் தொழில்முனைவோருக்கான பயனுள்ள அமர்வுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள், சிறப்பு விளம்பரத் திட்டங்கள் மற்றும் வணிக அரங்குகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், புதிய வாடிக்கையாளர்களையும் வணிகக் கூட்டாளர்களையும் அடையாளம் காண முடியும்.

மேலும், மாற்றுத்திறனாளித் தொழில்முனைவோருக்கு 10 இலவசக் கண்காட்சி அரங்குகள் வழங்கப்படவுள்ளன. B40 குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும், முதன்முறையாக வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கும் தொழில்முனைவோருக்கும் சிறப்புக் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலத்தில் பதிவு செய்யும் தொழில்முனைவோருக்கு 25 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சலுகை செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 10 மணி முதல் அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கார் விற்பனை, அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி, ஆடை, இனிப்புகள் மற்றும் கேக் தயாரிப்பு, தொலைத்தொடர்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் இக்கண்காட்சியில் அரங்குகளைப் பதிவு செய்து பங்கேற்கலாம்.

தங்களது வணிகத்தை விரிவுபடுத்தவும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும், புதிய வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கவும் விரும்பும் மலேசிய இந்தியத் தொழில்முனைவோருக்கு இந்நிகழ்வு ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். மேலதிக விவரங்கள் மற்றும் பதிவுகளுக்கு 016-964 3125 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Scroll to Top