கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் 2026 : மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PKS) முக்கிய பங்கு வகிப்பதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI) மைய நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், நிறுவனங்களின் உற்பத்தித்திறன், சந்தை விரிவாக்கம் மற்றும் அதிக மதிப்புள்ள வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட Boost SME என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் நிதி தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் வேகமான டிஜிட்டல் வங்கிச் சேவைகள், SME கடன்கள், தினசரி சலுகைகள் மற்றும் பணத் தள்ளுபடிகள், அத்துடன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகளை ஒரே தளத்தில் வழங்குகிறது.
இதன் மூலம் நிறுவனங்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளை மிகவும் திறமையாக நிர்வகிக்கவும், நிதி நிலை குறித்த தெளிவான தகவல்களைப் பெறவும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தவும் முடியும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
மேலும், Boost மற்றும் SME நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, தற்போதுள்ள சவால்களை சமாளித்து மாறிவரும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் AI பயணம் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களால் முன்னெடுக்கப்படுவதாகவும், டிஜிட்டல் மாற்றத்தை சரியான முறையில் செயல்படுத்தினால் மலேசியர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.







