கோலாலம்பூர், 04 அக்டோபர் 2026 : மலேசிய நால்வர் மன்றமும் மலேசிய சிவனடியார் திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவாசக மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தொடங்கி வைத்தார்.
நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சைவ சமயத்தில் சிறப்புமிக்க அருள்நூலாகப் போற்றப்படுகிறது. மாணிக்கவாசகர் பாடப் பாட, தில்லை நடராஜப் பெருமானே அந்தணர் வடிவில் வந்து ஓலைச்சுவடியில் தமது திருக்கரங்களால் எழுதிய அருள்நூல் திருவாசகம் என சைவ மரபில் போற்றப்படுகிறது.
‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற சிறப்புமிக்க தொடர், திருவாசகத்தின் பக்தி மற்றும் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.மலேசிய மண்ணில் சிவநெறியையும் திருமுறைப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாடு, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்ததாக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இறைவனை மனமுருகி வேண்டும்போது அகமும் புறமும் தெளிவடைந்து, உலகியல் சிக்கல்கள் மற்றும் கவலைகளால் அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடுதோறும் சிவவாசமும், உள்ளம்தோறும் திருவாசகமும் ஒளிர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







