கோலாலம்பூர், 04 அக்டோபர் 2026 : 2030-ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாகவும் மலேசியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கட்டமைப்பை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காகப் பல்வேறு தேசியத் திட்டங்களும் முன்னெடுப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
AI Malaysia Berhad, 2026–2030 தேசிய செயற்கை நுண்ணறிவுச் செயல் திட்டம், டிஜிட்டல் செயல் திட்டம் மலேசியா 2030, AI@Work, Rakyat Digital, MyGOV, MyGDX, MY-AI Standards மற்றும் மலேசிய செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்ட திட்டங்கள் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.



இந்த முயற்சிகள் மூலம் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவைக் கடந்து, தன்னாட்சி அடிப்படையில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்பியல் செயற்கை நுண்ணறிவு போன்ற அடுத்தகட்டத் தொழில்நுட்பங்களை நோக்கி மலேசியா முன்னேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி, மக்களுக்கு மேம்பட்ட வேலைவாய்ப்புகள், வலுவான தொழில் நிறுவனங்கள், திறன்மிக்க பொதுச் சேவைகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை வழங்குவதில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற இளைஞர் பொருளாதார மன்றத்தின் (YEF) 2026-ஆம் ஆண்டுக்கான அமைச்சர்கள் குழு அமர்வில் உரையாற்றிய அவர், 3,000-க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒன்றிணைந்து வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வதுடன், புதியவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி, தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவைத் தங்களது திறன்களின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர் பொருளாதார மன்றம் போன்ற தளங்கள், அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிகழ்வுகள் மலேசிய இளைஞர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு காலத்தில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கத் தயாராகவும் உதவுவதாகத் தெரிவித்தார்.







