என் தமிழ்

அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு : உடனடி நடவடிக்கை மற்றும் சட்ட சீர்திருத்தம் தேவை என DAP வலியுறுத்தல்

புத்ராஜெயா, 19 ஆகஸ்ட் 2026 : மலேசியாவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான தொகுதி மேம்பாட்டு நிதி (CDF) வழங்கப்பட வேண்டும் என்றும், இதனை உறுதி செய்ய சட்ட ரீதியான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஜனநாயக செயல் கட்சி (DAP) வலியுறுத்தியுள்ளது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிக்கு DAP தொடர்ந்து உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளதாகவும், சமமான நிதி ஒதுக்கீட்டை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதல் நேரடி நிதி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்ததை வரவேற்ற கோபிந்த் சிங் தியோ, அது தொகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அனைத்து எம்.பி.க்களுக்கும் பாரபட்சமின்றி சமமான நிதி வழங்க வேண்டும் என்ற அடிப்படைப் பிரச்சினைக்கு அது முழுமையான தீர்வாகாது எனக் குறிப்பிட்டார்.

அரசியல் சார்பு அல்லது வாக்காளர்களின் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொகுதிக்கு வழங்கப்படும் நிதியில் வேறுபாடு காட்டுவது ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான CDF நிதி ஒதுக்கீட்டை சட்டத்தின் மூலம் நிரந்தரமாக உறுதி செய்ய வேண்டும் என DAP கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டம் இயற்றப்படுவதன் மூலம் நிதி ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு மற்றும் தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

எனவே, அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டை முதலில் வழங்கி, பின்னர் மலேசியாவின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் சமமான நிதி கிடைப்பதை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top