ஜப்பான், 03 அக்டோபர் 2026 : ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026இல், ஸ்குவாஷ் ஆடவர் அணி மலேசியாவுக்கான 9ஆவது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், மலேசிய அணி பாகிஸ்தான் அணியை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
மலேசிய அணியில் ஈன் யோவ் ந்க் (28), முகமது சியாஃபிக் முகமது கமால் (30), அமீஷென்ராஜ் சந்தரன் (22) மற்றும் சஞ்சய் ஜீவா (27) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2010ஆம் ஆண்டு குவாங்சோவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் ஆடவர் அணிப் பிரிவில், மலேசியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கமும், 2018ஆம் ஆண்டில் தங்கப் பதக்கமும், 2022ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கமும் வென்ற மலேசிய அணி, தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
மேலும், ஈன் யோவ் ந்க் மற்றும் முகமது சியாஃபிக் முகமது கமால் ஆகியோர் 2018, 2022 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய ஸ்குவாஷ் ஆடவர் அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் வெண்கலப் பதக்கங்களையும் வென்றன.







