18 ஆகஸ்ட் 2026 : இந்தியாவின் தேர்தல் நடைமுறை அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தம்மிடம் பேசியதாகவும், அப்போது இந்தியாவின் தேர்தல் மற்றும் அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எவ்வாறு தேர்தல் நடத்தப்படுகிறது என்று தாம் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற கடந்த தேர்தலில் 64.60 கோடி வாக்காளர்கள் பங்கேற்றதாகவும், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தபால் வாக்குகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய முறையான அடையாள அட்டையை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் நடைமுறையை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையும், அமெரிக்க தேர்தல்களை அமெரிக்க குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சட்டமசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 60 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுவது அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளதாக டிரம்பின் பதிவை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.






