என் தமிழ்

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 38 பேருக்கு தொழில் உபகரண உதவி : பாப்பாராயுடு வீரமன் நேரில் ஆய்வு

சிலாங்கூர், 02 அக்டோபர் 2026 : சிலாங்கூர் மாநிலம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான Blueprint மற்றும் I-SEED தொழில் உபகரண உதவித் திட்டத்தின் மூலம் மொத்தம் 38 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 26 பேர் Blueprint உபகரண உதவியையும், 12 பேர் I-SEED உபகரண உதவியையும் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் உதவி பெற்றவர்களின் தொழில் நடவடிக்கைகளை நேரில் பார்வையிடும் வகையில், பாப்பாராயுடு வீரமன் மூன்று பயனாளிகளின் கடைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தொழில் தேவைகளைப் பார்வையிட்டார்.

உணவுத் தொழில் நடத்தி வரும் நாசிருதீன் பின் சாலேக்கு மிளகாய் அரைக்கும் இயந்திரம், ரொட்டி சனை தயாரிப்பதற்கான கடை உபகரணங்கள், மூன்று அடுப்பு கொண்ட சமையல் அடுப்பு, மேசைகள், நாற்காலிகள் மற்றும் கூடாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல், உணவுத் தொழில் நடத்தும் சாதியா பிந்தி சைடினுக்கு மிக்சர், எண்ணெயில் பொரிக்கும் இயந்திரம், குளிர்விப்புத் தட்டு, கேக் தட்டுகள், நான்கு அடுக்குகள் கொண்ட தட்டு அடுக்கு அலமாரி மற்றும் கூடாரம் ஆகியவை வழங்கப்பட்டன. மளிகைக் கடை நடத்தி வரும் சசிகலா தேவி சுப்பிரமணியத்துக்கு I-SEED திட்டத்தின் கீழ் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது.

உதவி உபகரணங்கள் பயனாளிகளின் அன்றாடத் தொழில் நடவடிக்கைகளில் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதையும், குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவுவதையும் நேரில் காண முடிந்ததாக பாப்பாராயுடு வீரமன் தெரிவித்தார்.

இந்த உதவி வெறும் உபகரணங்களை வழங்குவதுடன் முடிவடையாமல், மக்களின் வருமானத்தை உயர்த்தவும் குடும்பப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து பயனாளிகளும் வழங்கப்பட்ட உதவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது தொழில்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

Scroll to Top