ஜப்பான், 02 அக்டோபர் 2026 : ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026இல், Identity V – Asian Games Version என்ற இ-விளையாட்டுப் பிரிவில் மலேசிய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், ஏழு வீரர்களைக் கொண்ட மலேசிய அணி அரையிறுதியில் ஜப்பான் அணியிடம் 0–2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
இப்போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. மலேசியா மற்றும் சீனத் தைபே அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.
மலேசிய அணியில் யூஜி சியா (18), ஜார்ஜ் ஷான் யுவான் சின் (19), வின்சென்ட் கை லியாங் யீ (19), வெய் ஹாவ் நெங் (23), வென் ஃபெங் யாவ் (22), நிக்கி ஜுன் ஹொங் ஹோ (19), ஹொங் மிங் கான் (23) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







