சென்னை, 17 ஆகஸ்ட் 2026 : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
இதன் மூலம் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகள் கூடுதல் பயன் பெறுவார்கள். இந்த கூடுதல் கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே 25ஆம் தேதி குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50,000 வரையிலான தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னர் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கூடுதல் தள்ளுபடி நடவடிக்கையுடன், சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். விவசாயம் சாதி, மதம், இனம் மற்றும் மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய முக்கிய தொழில் என்றும், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.






