சிலாங்கூர், 01 அக்டோபர் 2026 : கம்போங் சுங்கை காயு ஆரா பகுதியில் நடைபெற்று வரும் ஆற்றங்கரை சீரமைப்புப் பணிகளை டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் ஆய்வு செய்தார். இப்பணிகள் தற்போது ஏறக்குறைய 100% நிறைவடைந்துள்ளன. ஆற்றங்கரை அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் வகையில், வடிகால் அமைப்பு, தடுப்புச் சுவர் மற்றும் நீர் வெளியேற்றக் குழாய் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. புல் நடும் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளன.
கடந்த மே மாதம் இப்பகுதியில் நடைபெற்ற LRT3 தூண் ஆய்வின்போது, தொடர்ந்து பெய்த கனமழையால் ஆற்றங்கரையில் ஏற்பட்ட அரிப்பு குறித்து உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆற்றங்கரையைச் சீரமைக்கும் பணிகளுக்காக RM3 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோபிந்த் சிங் டியோ, உள்ளூர் மக்களின் கவலைகளுக்குத் தீர்வு காணப்படுவது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பிரசாரானா, பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம் (MBPJ) மற்றும் சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.







