கோலாலம்பூர், 17 ஆகஸ்ட் 2026 : துணைப் பிரதமர் 1 டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டின் இரண்டாவது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.
கூட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகத்தை முறையான, வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரமணன் ராமகிருஷ்ணன், வேலைவாய்ப்புகளில் மலேசியத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவது ஒவ்வொரு துறை மற்றும் தொழில்துறையின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது தேவைக்கேற்பவும் முறையாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் ஊதியம் தொடர்பான நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகம் தொடர்பான நடைமுறைகளை மேலும் திறமையானதாகவும் பொறுப்பானதாகவும் மாற்றுவதற்கு MADANI அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அதேநேரம், தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றுவதிலும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதிலும் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம், நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாப்பதுடன், தொழில்துறைகளின் உண்மையான தேவைக்கு ஏற்ப வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






