என் தமிழ்

DAP அரசாங்கத்தில் தொடரும் : முக்கிய சீர்திருத்தங்களை விரைவில் நிறைவேற்ற கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

புத்ராஜெயா, 17 ஆகஸ்ட் 2026 : DAP தேசிய மாநாட்டில் கட்சி பிரதிநிதிகள் கூட்டாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்துள்ள நிலையில், கட்சியின் முக்கிய நிறுவன மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

கூட்டாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான கட்சியின் முடிவு, முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளுடன் தொடர வேண்டும் என அவர் தெரிவித்தார். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அட்டர்னி ஜெனரல் மற்றும் பொது வழக்குத் தொடருநர் பதவிகளைப் பிரிப்பது, பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளாக மட்டுப்படுத்துவது, பாதுகாப்புக் குற்றங்கள் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் (SOSMA) மற்றும் அமைதியான ஒன்றுகூடல் சட்டம் (PAA) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய நிறுவன சீர்திருத்தங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்களுக்கான அடிப்படை பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் மற்றும் பொது வழக்குத் தொடருநர் பதவிகளைப் பிரிப்பதற்கான சட்டமூலமும், பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளாக வரையறுப்பதற்கான சட்டமூலமும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

SOSMA சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அமைச்சரவை அறிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் பல மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இந்தச் சட்டமூலங்களை மேலும் தாமதமின்றி இறுதி செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து அண்மையில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், முக்கிய சீர்திருத்த சட்டமூலங்களுக்கும் இதேபோன்ற சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது வரவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில் அவற்றை விவாதிப்பதற்காக கூடுதல் அமர்வு நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த முக்கிய சீர்திருத்தங்களை தாமதமின்றி நிறைவேற்றுவதில் DAP தொடர்ந்து முழுமையான உறுதியுடன் செயல்படும் என்றும், சீர்திருத்த சட்டமூலங்கள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Scroll to Top