கோலாலம்பூர், 17 ஆகஸ்ட் 2026 : எதிர்பார்ப்புகளைவிட வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் இன்று தொடக்க வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் பணவீக்கத்தில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தெளிவு, அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (Fed) செப்டம்பர் 15 மற்றும் 16, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Federal Open Market Committee (FOMC) கூட்டத்தில் எடுக்கும் பணவியல் கொள்கை முடிவைப் பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது. இதனிடையே, முக்கிய உலக நாணயங்களின் தொகுப்புக்கு எதிராக ரிங்கிட் கலவையான நிலையைப் பதிவு செய்தது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக ரிங்கிட் 2.5645/5685 ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 2.5660/5690 ஆக இருந்தது. அதேபோல், யூரோவுக்கு எதிராகவும் ரிங்கிட் 4.7257/7326 ஆக உயர்ந்தது. முந்தைய முடிவில் அது 4.7182/7234 ஆகப் பதிவாகியிருந்தது. எனினும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக ரிங்கிட் 5.5312/5394 ஆக சரிந்தது. முந்தைய வர்த்தக முடிவில் இது 5.5232/5293 ஆக இருந்தது.
பிராந்திய நாணயங்களுடன் ஒப்பிடுகையிலும் ரிங்கிட் கலவையான செயல்பாட்டைக் காட்டியது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.1923/1975 ஆக உயர்ந்தது. முந்தைய முடிவில் அது 3.1924/1964 ஆக இருந்தது. அதேவேளை, தாய்லாந்து பாட் நாணயத்திற்கு எதிராக ரிங்கிட் 12.3190/3442 ஆக சரிந்தது. முந்தைய முடிவில் இது 12.3153/3333 ஆக இருந்தது. பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக ரிங்கிட் 6.64/6.66 என்ற நிலையில் மாற்றமின்றி இருந்தது. இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராகவும் 229.0/229.4 என்ற நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றமின்றி காணப்பட்டது.






