என் தமிழ்

“திரையிசை கண்ட இலக்கியம் 2026” இறுதிச்சுற்று : 20 போட்டியாளர்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, 16 ஆகஸ்ட் 2026 : ஓம்ஸ் அறவாரியம் மற்றும் Malar TV இணைந்து நடத்தும் “திரையிசை கண்ட இலக்கியம் 2026” மாபெரும் இறுதிச்சுற்று வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தின் சிவிக் மண்டப அரங்கில் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் இலக்கியச் செழுமையை எடுத்துரைக்க 20 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயம், கவித்துவம் மற்றும் மொழிச்சிறப்புகளை போட்டியாளர்கள் தங்களது படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தவுள்ளனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.1,500 ரொக்கப் பரிசுகளுடன் கேடயங்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், தமிழில் சிறப்பாகப் பங்களிக்கும் ஒருவருக்கு சிறப்பு விருதும் கேடயமும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத்தையும் திரையிசையையும் இணைக்கும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு ஓம்ஸ் பா. தியாகராஜன் ஆதரவு வழங்குகிறார். மேலும் தகவல்களுக்கு 012-2443010 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Scroll to Top