பகாங், 27 செப்டம்பர் 2026 : மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில், கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் கண்ணதாசன் விழாக்களின் தொடர்ச்சியாக, பகாங் மாநிலத்தில் கண்ணதாசன் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர். கண்ணதாசன் தனது பாடல்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அழியாத படைப்புகளை வழங்கியதுடன், வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான சிந்தனைகளையும் விட்டுச் சென்றுள்ளதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.
கம்பன், திருவள்ளுவர் ஆகியோரின் சிந்தனைகளை தனது வரிகளில் கொண்டு வந்த கண்ணதாசனின் படைப்புகள், அவர் மறைந்த பின்னரும் தலைமுறைகளைத் தொடர்ந்து சென்றடைகின்றன. அவரது சிந்தனைகளும் படைப்புகளும் தமிழ் வாழும் காலம் வரை நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்ணதாசனின் தனித்துவமான சிந்தனை மற்றும் துணிச்சலான கவிதை வரிகளை நினைவுகூர்ந்த டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், அவரது படைப்புகள் இன்றும் மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.







