என் தமிழ்

ரிங்கிட் : அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வு

கோலாலம்பூர், 12 ஆகஸ்ட் 2026 : மலேசிய ரிங்கிட் இன்று தொடக்க வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுப்பெற்றது. இரண்டாம் காலாண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) புள்ளிவிவரங்கள் வெளியாகவுள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் ரிங்கிட்டுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

காலை 8 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் 4.0920/4.0995 ஆகப் பதிவானது. முந்தைய வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4.0930/4.0990 ஆக இருந்த நிலையில், ரிங்கிட் சற்று உயர்வைக் கண்டது. 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசிய பொருளாதாரம் 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய காலாண்டில் பதிவான 5.4 சதவீத வளர்ச்சியைவிட அதிகமாகும். வலுவான உள்நாட்டு பொருளாதார செயல்பாடுகள் ரிங்கிட்டின் மதிப்பை ஆதரிக்கும் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எனினும், உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் ஆசிய மேற்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்கள் தொடர்ந்து நாணயச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய தொடக்க வர்த்தகத்தில் ரிங்கிட் யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட சில முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் வலுப்பெற்றது. அதேவேளை, பிராந்திய நாணயங்களுடனான அதன் வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகும் நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் ரிங்கிட்டின் அடுத்தகட்ட நகர்வில் தொடர்ந்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top