கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் 2026 : சபாவின் பியூஃபோர்ட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான, வெளிப்படையான மற்றும் உடனடி விசாரணை நடத்துமாறு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், இந்த சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, வெஸ்டன் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பயன்படுத்திய நீளமான இரும்புக் கம்பி மேலே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஒருவர் மின்சாரம் தாக்கியதைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.






