பெட்டாலிங் ஜெயா, 06 ஆகஸ்ட் 2026 : மறைந்த கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான நா. முத்துக்குமாரின் படைப்புகளை இசை வழியாக நினைவுகூரும் “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – கருத்தும் கவியும்” என்ற இன்னிசை நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 5) சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இந்தியா கேட் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பாடலாசிரியர் அருட்செல்வன் மற்றும் இசையமைப்பாளரும் JOM KIDS BAND நிறுவனருமான ஜே ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் நோக்கம், சிறப்பம்சங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
2000ஆம் ஆண்டு முதல் தனது மறைவு வரை எண்ணற்ற கவிதைகள் மற்றும் தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் படைத்து தமிழ் இலக்கிய உலகில் அழியாத முத்திரை பதித்த நா. முத்துக்குமாருக்கு இசை வழியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக இந்த இன்னிசை நிகழ்ச்சி அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக, இன்னிசை வழியாக கவிதை இலக்கியத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தல், திரையிசைப் பாடல்கள் மூலம் கவிதை படைக்கும் திறனை ஊக்குவித்தல், இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்த்தல் மற்றும் இலக்கியத்தையும் இன்னிசையையும் இணைக்கும் புதிய வடிவ நிகழ்ச்சியை உருவாக்குதல் ஆகியவை குறிப்பிடப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் கலந்துகொண்டு, நா. முத்துக்குமாருடன் பகிர்ந்த நினைவுகள், அவரது பாடல்களின் இலக்கியச் சிறப்பு மற்றும் பல சுவாரஸ்யமான அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
மேலும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – கருத்தும் கவியும்” இன்னிசை நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 12, 2026 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு, சிலாங்கூரின் பத்து கேவ்ஸில் அமைந்துள்ள ஷெங்கா கன்வென்ஷன் ஹாலில் (Shenga Convention Hall) நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் RM100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தமிழ் இலக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கில், படிவம் 5 மற்றும் படிவம் 6-இல் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச நுழைவுச்சீட்டுகளும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த இலவச நுழைவுச் சீட்டுகளை பெற கீழ்கண்ட கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருமதி மாலா – +6011-6146 1866
“இன்றைய இளைஞர்களிடம் இலக்கியத்தை புதிய வடிவில் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. நா. முத்துக்குமாரின் கவிதைகளையும் திரைப்படப் பாடல்களையும் இன்னிசையோடு கொண்டாடுவதன் மூலம், இளைஞர்களிடையே தமிழ் இலக்கியத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்துவதோடு, ஒரு புதிய இலக்கிய விழிப்புணர்வையும் உருவாக்க முடியும்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜே தலைமையிலான JOM KIDS BAND இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளது. நிகழ்ச்சியை ‘டிக் டாக்’ புகழ் கவிஞர் அருட்செல்வன் தொகுத்து வழங்கவுள்ளார்.
நுழைவுக் கட்டணம் : RM 100
GreatTicket 24-hours Customer Service Team:
+60 11 1638 6959
+60 11 5551 2444









