புத்ராஜெயா, 01 ஆகஸ்ட் 2026 : மலேசியா மற்றும் இந்தியாவுக்கிடையேயான வரலாற்று, பண்பாட்டு மற்றும் நாகரிக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளரான ராஜ்மோகன் காந்தியுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
இருதரப்பு உறவுகள், நாகரிகங்களுக்கிடையேயான புரிந்துணர்வு, கல்வி, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் மனிதநேய மதிப்புகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா–இந்தியா உறவுகள் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாக மக்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட நாகரிக மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
சமூக நல்லிணக்கம், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற மதிப்புகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
மலேசியா மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் தற்போது வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், இந்த உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.






