என் தமிழ்

மலேசியா–சீனா ஒத்துழைப்பு : முகாமிடல், இளைஞர் மேம்பாட்டில் இணைந்து செயல்பட OCM–CICC ஆலோசனை

கோலாலம்பூர், 31 ஜூலை 2026 : சீனாவின் China International Camping Congress (CICC) அமைப்பின் ஏழு பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, முன்னாள் துணை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் முன்னாள் போக்குவரத்து அமைச்சரான டான் ஸ்ரீ லியோ தியோங் லாய் தலைமையில், நேற்று (ஜூலை 31) மலேசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு (OCM) மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டது.

பிரதிநிதிகளை OCM தலைவர், தென்கிழக்காசிய விளையாட்டுப் பேரமைப்பின் (SEAGF) தலைவர் மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) தென்கிழக்காசிய பிராந்திய துணைத் தலைவருமான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) முகமட் நோர்சா ஸக்காரியா வரவேற்றார்.

சந்திப்பின்போது, மலேசியாவில் முகாமிடல் (Camping), வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப்பதில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டான் ஸ்ரீ முகமட் நோர்சா ஸக்காரியா, CICC, OCM மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு இணைந்து, குறிப்பாக ‘ராகன் மூடா’ (Rakan Muda) திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான கூட்டு முயற்சிகளை ஆராய வேண்டும் என்று முன்மொழிந்தார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலும், தென்கிழக்காசிய விளையாட்டுப் பேரமைப்பிலும் வகிக்கும் தனது பொறுப்புகளின் அடிப்படையில், இளைஞர் மேம்பாட்டுக்கான வெற்றிகரமான திட்டங்களை தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், CICC நிர்வாகத் தலைவர் லி ஷோவென், சீனாவின் பொது விளையாட்டு நிர்வாகமும் (GASC), சீன ஒலிம்பிக் கவுன்சிலும் (COC) CICC-க்கு ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். மலேசியாவில் CICC-யின் கிளையை நிறுவி, முகாமிடல் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளை ஊக்குவிப்பதுடன், மலேசியா–சீனா இளைஞர் பரிமாற்றத் திட்டங்களையும் முன்னெடுக்க விருப்பம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளுக்கு மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும், மலேசிய ஒலிம்பிக் கவுன்சிலும் ஆதரவு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இரு நாடுகளின் இளைஞர்களுக்கும் விளையாட்டு சமூகத்திற்கும் பயனளிக்கும் நீடித்த கூட்டாண்மையை உருவாக்க விரும்புவதாகக் கூறினார்.

மலேசிய ஒலிம்பிக் கவுன்சில், இரு தரப்புக்கும் பயனளிக்கும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை தொடர்ந்து ஆராய்ந்து, CICC மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நீண்டகால கூட்டாண்மையை உருவாக்குவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Scroll to Top